மஞ்சளின் அற்புதமான மருத்துவக்குணம்


மஞ்சள் பொடியை உணவில் சேர்த்துச் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. இது உடலிலுள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. 
மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த  ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின்  தாக்குதலை முறியடிக்கவும் உதவுகிறது.

 மஞ்சள் தூளை பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்றில் எரிச்சல் போன்றவை சரியாகிறது.மஞ்சள் சேர்த்துக் கொதிக்கவைத்த வெந்நீரில் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் விளியாகும்.

மஞ்சளை அரைத்து கரப்பான், சொரி, சிரங்கால் ஏற்படும் தோல் நிறமாற்றத்திற்கு மேல்பூச்சாக பூச நிவாரணம் கிடைக்கும். மஞ்சளை விழுதாக் அரைத்துச் சுடவைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும்.

மஞ்சளுடன் அரிசி மாவைச் சேர்த்து களியாகக் கிண்டியோ, சதத்துடன் சேர்த்து அரைத்தோ அதை கட்டிகளின் மீது போடுவதால் அது பழுத்து  உடையும்.


மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள்,  சேற்றுப்புண் போன்றவை குணமாகும். 
 
முகத்துக்குப் பூசும் மஞ்சள் முகத்தில் முடி வராமல் தடுக்கவும், முகத்துக்கு ஒருவித மினுமினுப்பைத் தருவதற்கும், வசீகரத்தைத் தருவதற்கும் உதவுகிறது. மேலும் இது மிகவும் மங்களகரமான ஒரு பொருளாகவும் கருதப்படுகிறது.

வெறும் மஞ்சள் தண்ணீரை மட்டும் குடிப்பதால் நாம் ஏகப்பட்ட நன்மைகளை பெற முடியும். மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, ஆன்டி கார்சினோஜெனிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை காணப்படுகிறது.

இந்திய சமையலைப் பொருத்தவரை மஞ்சள் ஒரு முக்கியமான மசாலாப் பொருளாகும். மஞ்சளில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளன. மஞ்சள் உணவுக்கு வண்ணத்தை சேர்ப்பதோடு கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. அதனால் நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் இருந்தே மஞ்சளை தங்கள் உணவுகளில் சேர்த்து வருகிறார்கள். மஞ்சள் நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது பருவகால குளிர் மற்றும் காய்ச்சலை விரட்ட உதவுகிறது.

மஞ்சளில் வைட்டமின் ஏ, தியாமின் , ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகிறது. இதில் உள்ள குர்குமின் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது.


மூட்டுவலி இன்றைய காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியை குணப்படுத்த உதவுகிறது. ஒரு டம்ளர் தண்ணீரில் மஞ்சள் கலந்து குடிப்பது உங்க மூட்டு வலியை குணப்படுத்த உதவி செய்யும்.

மஞ்சளில் உள்ள குர்குமின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நோயை தடுக்க உதவுகிறது. மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இது ப்ரீ ரேடிக்கல் சேதத்தை தடுக்கிறது மற்றும் நோய் பாதிப்பை தடுக்கிறது.

செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கவும், இது எடையை குறைக்கவும் உதவுகிறது. மஞ்சளை தண்ணீருடன் கலந்து குடிக்கும் போது அதன் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மெட்டா பாலிசத்தை அதிகரித்து எடை இழப்பை பெற உதவுகிறது.

மஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறையவே உள்ளன. இது உங்க சரும ஆரோக்கியத்திற்கு சிறந்த பலனை அளிக்கிறது. வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் செல் சேதத்தை தடுக்க உதவுகிறது. சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.

உடலில் உள்ள அனைத்து கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. நமது உண்ணும் உணவானது சுற்றுச்சூழல் காற்று மூலம் வெவ்வேறு நச்சு இராசயனங்கள் கூட தொடர்பு கொள்கிறது. எனவே இந்த நச்சுத்தன்மையை அகற்ற வெறும் ஒரு டம்ளர் நீரில் மஞ்சள் கலந்து குடித்து வரலாம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருங்கை

எதிர்பார்த்தது நில்..

உன்னை பற்றி ‌தெரிந்துகொள்