செம்பருத்தி பயன்கள்

                                               


                             
செம்பருத்தி செடியின் இலை மற்றும் பூக்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதிலும் அதனுடைய பெரிய வண்ணமயமான பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். 

 இது ஒரு அழகான அலங்கார பூ மட்டுமல்ல, இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அந்தோசயினின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற அத்தியாவசிய சேர்மங்களும் உள்ளன.

செம்பருத்திப் பூக்கள் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உடையதாக இருக்கும். இது குளிர்ச்சி தன்மை உடையது. செம்பருத்தி செடிகளில் பல வகை உண்டு, இவை மூலிகை மருந்துகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

செம்பருத்திப் பூக்களில் பித்தத்தை குறைக்கும் பண்புகளும், இரத்த கசிவு எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.

 ஒற்றைத் தலைவலி,முகப்பருக்கள்,அசிடிட்டி,அல்சர்,இரத்தக் கசிவு பிரச்சனைகள் (ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு) மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும். 



இரத்த சோகை, மூலம், தூக்கமின்மை, சிறுநீர் பாதை தொற்று(UTI) மற்றும் இரத்தப்போக்கு பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. இவை உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு மட்டுமின்றி சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளையும் நீக்குகின்றன.

செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.

மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க  உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது.

செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு,  பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.

உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.

செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி  குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
 
செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த  நிவாரணியாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.
 

செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருங்கை

எதிர்பார்த்தது நில்..

உன்னை பற்றி ‌தெரிந்துகொள்